2 குழந்தைகளை கொன்று போலீஸ் ஏட்டுவின் மனைவி தற்கொலை
போலீஸ் ஏட்டுவை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஓலைப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38). இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சங்கீதா (34). இவர்களுக்கு ரோகித் (8), தர்ஷினி (4) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டலாம்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சங்கீதா கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி விஷ மாத்திரைகளை தண்ணீரில் கலந்து தனது 2 குழந்தைகளுக்கு கொடுத்து கொலை செய்தார். பின்னர் அவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் ஏட்டுவின் மனைவி 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை குறித்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு மேல் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர், போலீஸ் ஏட்டு கோவிந்தராஜை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- போலீஸ் ஏட்டு கோவிந்தராஜுக்கும், பெண் போலீஸ் ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது மனைவி சங்கீதா, கோவிந்தராஜை கண்டித்து உள்ளார். இருப்பினும் அவர் பெண் போலீசிடம் உள்ள தொடர்பை விடவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. வாழ்க்கையில் வெறுப்படைந்த சங்கீதா குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் ஏட்டு கோவிந்தராஜ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.