+2 தேர்வு முடிவுகள் : நீலகிரி மாவட்டத்திற்கு 22வது இடம்
பிளஸ்-2 தேர்வில் நீலகிரி 94.27 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 22வது இடத்தை பிடித்தது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, கடந்த மாதம் 22ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் 7.72 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி இருந்தனர். தேர்வு முடிந்ததும், மாணவர்கள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் இருந்தன.
இந்நிலையில் நேற்று பிள்ஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் வெளியானது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் 38 அரசு பள்ளிகளில் 2778 மாணவர்கள் 3311 மாணவிகள் என 6089 பேர் எழுதினர். இதில் 2536 மாணவர்கள், 3204 மாணவிகள் என 5740 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் 94.27 சதவீத தேர்ச்சி பெற்று நீலகிரி மாவட்டம் 22வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 93.85 சதவீதம் தேர்ச்சி பெற்று 20வது இடம்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.