தொழிலாளியை தாக்கிய 2 பேருக்கு அபராதம்: நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கிய இருவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை நகனை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். சம்பவத்தன்று இவரது வீட்டில் கோழிகள் திருட்டு போனது தொடர்பாக திருட்டில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த சிங் மகன் ராமசெல்வன், பால் மகன் லிங்கேஸ்வரன் மற்றும் பொன்பெருமாள்ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஊர் பிரமுகர்கள் சமாதானப்படுத்தி 3 பேருக்கும் அபராதம் விதித்து அபராத தொகை சண்முகவேலிடம் வழங்கப்பட்டது.
இதனால் சண்முகவேல் மற்றும் ராமசெல்வன் தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வெளியூரில் இருந்து சண்முகவேலின் மகன் ராஜ்பெருமாள் என்பவர் ஊருக்கு வந்தபோது ராமசெல்வன் உள்ளிட்ட 3 பேரும் ராஜ்பெருமாளை தாக்கினராம். இதுதொடர்பான வழக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, தாக்குதலில் ஈடுபட்டதாக ராமசெல்வன், லிங்கேஸ்வரன் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம்வீதம் அபராதம் விதித்தும், பொன்பெருமாள் என்பவரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.