2 அரசு பஸ்களை திடீர் சிறை பிடித்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம், சேனம்விளை பகுதியில் 6 ஏ பேருந்தை முழுநேரமும் இயக்க கோரி பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-04-27 12:07 GMT

பேருந்து சிறைபிடிப்பு

குமரி மாவட்டம், குளச்சல் அருகே சேனம்விளையிலிருந்து தடம் எண் 6 ஏ என்ற அரசு பஸ் நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு 10 டிரிப் இயக்கப்பட்டது. இதனால் நாகர்கோவில் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயன் பட்டு வந்தனர். கடந்த சுமார் 30 வருடங்களாக இயக்கப்பட்டு வந்த இந்த தடம் பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கவில்லை. பஸ்சை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் நிறுத்தப்பட்ட பஸ் கடந்த ஒரு வருடமாக மீண்டும் இயங்க தொடங்கியது.

ஆனால் முழு நேரம் இயங்கவில்லை. ஒரு நாளைக்கு ஒரு டிரிப் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று தடம் எண் 6 ஏ பஸ் சேனம்விளைக்கு வரும் போது திடீரென சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்கள் பஸ்சை முன்பு போல் முழுநேரமும் இயக்க வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது தடம் எண் 6 எப் பஸ்சும் அங்கு வந்தது. அந்த பஸ்சையும் பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

தகவலறிந்த குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விரைந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சுகளை விடுவித்தார். தொடர்ந்து பஸ்சுகளை இயக்குவது தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் போக்குவரத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சேனம்விளையில் 2 அரசு பஸ்கள் சிறைப்பிடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News