குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
குளச்சல் அருகே கோடிமுனையில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் இன்று 1.5 மீட்டர் உயரத்திற்கு அலைகளின் உயரம் இருக்கும் எனவும்,45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வேகமாக வீசும் எனவும்,எனவே மீனவர்கள்,பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை சூளைமேடு மற்றும் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 20 பேர் ஒரு வேனில் ஆன்மீக சுற்றுலாவாக புறப்பட்டு இரவு கன்னியாகுமரி வந்தனர்.
அவர்கள் இரவு கன்னியாகுமரியில் தங்கிவிட்டு நேற்று காலை குளச்சல் அருகே கோடிமுனை ஊருக்கு வந்தனர். மதியம் சாப்பாட்டிற்காக பெண்கள் கோடிமுனையில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்திருந்த சூளைமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தமிழ் சோனியாவின் கணவர் வெசீஸ்(54), பள்ளி தேர்வு வெளியீடு பிரிவில்(டி.பி.ஐ)வேலை பார்க்கும் வாலிபர் மனோஜ்குமார் (25)உள்பட 6 பேர் அங்குள்ள தூண்டில் வளைவு கற்களில் ஏறி கடல் அழகை ரசித்தனர். பின்னர் ஆர்வ மிகுதியில் தூண்டில் வளைவு அருகில் உள்ள பாறை மீது ஏறி நின்றனர்.
அப்போது அங்கு திடீரென எழுந்த அலை பாறை மீது விழுந்ததில் நிலைதடுமாறி 6 பேரும் கடலில் விழுந்தனர். இதனை அறிந்த கோடிமுனை மீனவர்கள் 3 பைபர் வள்ளங்களில் சென்று அவர்களை மீட்டனர். இதில் வெசீஸ் மற்றும் மனோஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்த குளச்சல் மரைன் போலீசார் விரைந்து சென்று 2 உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.