பாலியல் தொந்தரவு 20 ஆண்டுகள் சிறை !
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
By : King 24x7 Angel
Update: 2024-03-07 12:40 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமிக்கு கடந்த நவம்பர் 11ம் தேதி அஜித் 20. என்பவர் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, அருகில் இருந்த புதர் பகுதிக்கு அழைத்து சென்றார். சிறுமிக்கு அஜித் ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்பதால் சிறுமி அவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் புதர் பகுதியில் வைத்து சிறுமிக்கு அஜித் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வெளியில் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டி உள்ளார். இதற்கிடையே பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் சிறுமியை ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது. இது குறித்து புதுமந்து காவல் ஆய்வாளர் அல்லி ராணி, துணை ஆய்வாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார் விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த அஜித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அஜித் மீது போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஶ்ரீதரன் குற்றம்சாட்டப்பட்ட அஜித்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 12,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அஜித் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். கடந்த ஜன., 18ம் தேதி அஜித், ஊட்டியை சேர்ந்த மற்றொரு சிறுமியை புதர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைதாகி தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.