2024ம் ஆண்டு 400 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
2024-ம் ஆண்டில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 400 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் 16-03-2024 முதல் 15-06-2024 முடிய 400 மெ.டன் அரவை கொப்பரை தேங்காய் இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய வட்டார பகுதிகளில் உள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் அரவை கொப்பரை தேங்காய் NAFED நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் விற்பனைக்குழுவின்; கீழ் இயங்கும் இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 400 மெ.டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படவுள்ளது. தரப் பரிசோதனையின் அடிப்படையில், அரவை கொப்பரையில் அயல் பொருள்கள் ஒரு சதவீதத்திற்கு மிகாமலும், பூஞ்சாணம் தாக்கிய மற்றும் கருப்பு நிற கொப்பரை 10 சதவீதத்திற்கு மிகாமலும், சுருக்கம் கொண்ட கொப்பரைகள் 10 சதவீதத்திற்கு மிகாமலும், சில்லு 10 சதவீதத்திற்கு மிகாமலும், ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமலும் நன்கு உலர வைத்து நியாயமான சராசரி தரங்களுடன் இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு அரவை கொப்பரைத் தேங்காயினை கொண்டு வந்து கிலோவுக்கு ரூ.111.60 என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகளின் வங்கி கணக்கில், அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில்; 16-03-2024 முதல் 15-06-2024 வரை அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ள நிலையில், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வட்டார பகுதிகளைச் சார்ந்த தென்னை சாகுபடி விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 9952341770 / 04563-222615 என்ற எண்ணிலும், இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை 7010280754, 9790387588, என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.