இலங்கையின் வவுனியா மாவட்டம், நேரியகுளம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (46) சமையல்காரர். இவர் மணிமுத்தாறு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தார். நாகேந்திரன், சுதாகர் (45), உள்ளிட்ட நான்கு பேர், கடந்த 2001 ஆம் ஆண்டு, தஞ்சாவூரை சேர்ந்த, ஓட்டுநரான செளந்தரகுமார் என்பவரின் காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். பிறகு, செளந்தரகுமாரை காருடன் கடத்தி சென்று, நாகை மாவட்டம் கீழையூரில் கொலை செய்து விட்டு, கார் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து கீழையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில், செளந்தரகுமார் மாயமானதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதன் அடிப்படையில், கொலை வழக்கு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த 2002 ஆம் ஆண்டு கொலையில், நாகேந்திரன், சுதாகர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையில், நாகேந்திரன், சுதாகர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்ற இருவர் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிறகு நாகேந்திரன், சுதாகர் இருவரும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்து காவல்துறையினர் தேடி வந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நாகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, காவல்துறைக்கு தெரியாமல் இலங்கைக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சுதாகரை மருத்துவக்கல்லூரி காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், நாகேந்திரன் இலங்கையில் இருந்து, விமானம் மூலம் சென்னைக்கு, வந்ததை அறிந்த, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல்துறையினர், 23 ஆண்டுகளாக காவல்துறைக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்த நாகேந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பிறகு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.