24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு அறையினை
குற்றச்செயல் எவ்வாறு தடுக்க முடியும், குற்றச் சம்பவங்களை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.;
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் 2024–25ன் கீழ்,அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்களின் கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் இன்று (29.5.2025) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், கண்காணிப்பு அறை எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது, இதன் மூலமாக குற்றச்செயல் எவ்வாறு தடுக்க முடியும், குற்றச் சம்பவங்களை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் 2024–25ன் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில், ஆலத்தூர் ஒன்றியத்தில் செட்டிக்குளம், பாடாலூர், அல்லிநகரம், மங்கூன் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் கை.களத்தூர், அரும்பாவூர், வேப்பந்தட்டை, ரஞ்சன்குடி ஆகிய 8 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு தலா ரூ.20 லட்சம் வீதம், மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலான Automatic Number Plate Recognition (ANPR) கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், பேட்டரி மற்றும் சக்தி மாற்றி வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முக்கிய சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாவட்டத்தின் முக்கிய சாலைகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்படுவதற்காகவும், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் விபத்துகளுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக காவல்துறையின் நடவடிக்கை எடுக்க இயலும். குற்றவாளிகள் பயன்படுத்தும் வாகனங்களை விரைவாக அடையாளம் காண முடியும். இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை காண்பதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் ஒரு மத்திய கண்காணிப்பு அறை உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க காவலர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்து, ரோந்து பணியில் உள்ள நெடுஞ்சாலை காவல் வாகனங்களுக்கு உடனடியாக தகவல்களை வழங்குவார். இந்நிகழ்வில், துணைக் கண்காணிப்பாளர் பிரபு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகப்பிரியா, காவல் நிர்வாக அலுவலர் மகாலிங்கம், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.