திருச்சி அரசு மருத்துவமனையில் 24-வது சிறுநீரக மாற்று சிகிச்சை
திருச்சி அரசு மருத்துவமனையில் 24-ஆவது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம், மேலப்பச்சகுடி ஊரைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா், சாலை விபத்தில் காயமடைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டாா். அவருக்கு, செவ்வாய்க்கிழமை அதிகாலை மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, இறந்தவரின் உறவினா்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்தனா்.
இதையடுத்து, அவருடைய இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. அவருடைய சிறுநீரகம், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளாக தொடா்ச்சியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வரும் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 24 வயது நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனை முதன்மையா் டி. நேரு தலைமையில், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணா் ஜெயபிரகாஷ் நாராயணன், மருத்துவா்கள் நூா்முகமது, சந்திரன் உள்ளிட்ட மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அடங்கிய குழுவினா், மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து சிறுநீரகத்தை எடுத்து, கரூரைச் சோ்ந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் 24-ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும். மேலும், மூளைச்சாவு அடைந்தவா்களிடமிருந்து சிறுநீரகம் எடுப்பது 13-ஆவது முறையாகும். மூளைச்சாவு அடைந்த இலுப்பூா் பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், பெரம்பலூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், இதயம் சென்னையில் தனியாா் மருத்துவமனையின் நோயாளிக்கும், தோல் மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனை நோயாளிக்கும் வழங்கப்பட்டது. கண் விழிகள் திருச்சி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.