நாகை மாவட்டம் கீழையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தலைமை காவலர் பாலமுருகன் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிரதாபராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் செல்லும் சாலையில், சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ஞானசேகன் மகன் பிரதீப் (30), பிரதாபராமபுரம் செருதூர் பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பு முகவரியை சேர்ந்த குப்பமுத்து மகன் செல்வம் (39) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் வைத்திருந்த 2 பைகளை சோதனை செய்த போது, 25 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதை அடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும், நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.