தஞ்சாவூரில் மே 29-இல் ஒரே இடத்தில் 25 கருட சேவை

தஞ்சாவூரில் மே 29ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒரே இடத்தில் 25 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Update: 2024-05-26 14:39 GMT

தஞ்சாவூரில் மே 29ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒரே இடத்தில் 25 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை வைபவம், மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் 90 ஆம் ஆண்டாக நடைபெறவுள்ள இந்த விழா மே 28 ஆம் தேதி தொடங்குகிறது. இதில், மே 28 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெறும்.

பின்னர், வெண்ணாற்றங்கரையில் இருந்து மே 29 ஆம் தேதி காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெறும். இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோயில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். பின்னர், 30 ஆம் தேதி காலை நவநீத சேவை நடைபெறவுள்ளது.

இதில், வெண்ணாற்றங்கரையில் 30 ஆம் தேதி காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெறும். இதில், 16 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனர். வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் மே 31 ஆம் தேதி காலை 9 மணியளவில் விடையாற்றி உற்ஸவம் நடைபெறவுள்ளது. இதனிடையே, இராஜராஜ சமய சங்கத்தில் மே 29 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, 30 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெறும்.

Tags:    

Similar News