ஆட்டோ ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

மூன்று சிறுமிகளைப் பாலியல் வல்லுறவு செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Update: 2024-04-24 09:26 GMT

சிறை தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள கெங்காதாரபுரம் செந்தில்நாதன் நகரைச் சேர்ந்தவர் ஏ.ஷேக் முகமது மைதீன் (45). ஆட்டோ ஓட்டுநர். இவர் 2022, அக்டோபர் மாதம் முதல் 2023, மே மாதம் வரை 6 வயதுடைய இரு சிறுமிகள், 10 வயது சிறுமி ஆகியோரை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்து வந்தார். இவர்களில் ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் கூறியபோது, ஷேக் முகமது மைதீன் மற்ற இரு சிறுமிகளையும் பாலியல் வல்லுறவு செய்தது வெளியில் தெரிய வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஷேக் முகமது மைதீனை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜ் விசாரித்து, ஷேக் முகமது மைதீனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், மூன்று சிறுமிகளுக்கும் முறையே ரூ. 2 லட்சம், ரூ. 2.50 லட்சம், ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
Tags:    

Similar News