265 மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள்
காளிகாப்பான் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மதுரை மாவட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார் மதுரை கிழக்கு வட்டம், யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, 265 மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, பள்ளி வளாகத்தில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 8 லட்சத்தின் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு, சுயதொழில் ஆகியவற்றிகும் முக்கியத்துவம் வழங்கி இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன. பெண்கள் கல்வி கற்கவும், சுயதொழில் செய்யவும், ஊதியம் பெறும் வேலைகளைத் தேட பயணம் தடையாக இருக்ககூடாது என்ற நோக்கில் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவித்திடும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல, பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று தன்னம்பிக்கையுடன் சமூகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பெண்கள் தங்களின் சிறு தேவைகளுக்கும் பிறர் கைகளை எதிர்பாரமல் சுயமாக செயல்படும் தலைநிமிர்வை தருகிறது. மேலும் பெண்களின் குடும்பச் சுமைகளை குறைத்திடும் நோக்கிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் பசியின்றி சாப்பிட்டு மனநிறைவோடு கல்வி கற்கவேண்டும் என்ற நோக்கிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரபி.மூர்த்தி தெரிவித்தார். தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி யா.ஒத்தக்கடை ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் மற்றும் குடிநீர் திட்டப்பணி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும், மதுரை கிழக்கு வட்டம் காளிகாப்பான் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன், மாவட்டஊராட்சித்தலைவர் சூரியகலா காலநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ரா. மணிமேகலை, ஊராட்சிமன்றத் தலைவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.