குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது: எஸ்பி அதிரடி
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளின் குற்றவாளியான வாசுதேவ நல்லூர் புதுமந்தை தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவரின் மகனான இளங்கோவன் (28), வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற வழக்குகளின் குற்றவாளியான மலையடி குறிச்சி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகனான ஜெயச்சந்திரன் என்ற விஞ்ஞானி (33). சங்கரன்கோவில் பகுதிகளில் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகளின் குற்றவாளியான சங்கரன் கோவில் காவேரி நகரைச் சேர்ந்த சங்கரன் என்பவரின் மகனான செந்தில்குமார்(42) ஆகியோர் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுரேஷ்குமார் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட , மாவட்ட ஆட்சித்தலைவர் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து நேற்று மூன்று பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.