இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது

செம்பரம்பாக்கம் அருகே இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2024-05-30 16:26 GMT

கைதானவர்கள்

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், பத்து மாத பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, அவர்களின் கடனை அடைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டி உள்ள பகுதியில் ராஜேஷ் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், அவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர், இந்த வழக்கை கொலை வழக்காக குன்றத்தூர் போலீசார் பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தெற்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் (23), பொன்னேரியைச் சேர்ந்த திருமலை (19) மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரித்த போது, செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷை மடக்கி, கத்தியை காட்டி மிரட்டி செல்போன் கேட்டும் அவர் கொடுக்காததால், கத்தியால் அவரை வெட்டிவிட்டு, அவரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில், மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன், பணம், மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News