வழிபறியில் ஈடுபட்ட சிறுவர் உட்பட 3 பேர் கைது !
மயிலாடுதுறை அருகே தனியார் சிட்பண்ட் ஊழியரை தாக்கி வழிபறி செய்துவிட்டு இருவர் தப்பி ஓட்டம். ஒருவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து காவல்துறையில் ஒப்படைப்பு.
By : King 24x7 Angel
Update: 2024-04-18 09:39 GMT
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் பூராசாமி மகன் ஜெகன்நாதன் (வயது 36). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் சிட்பண்ட் ஒன்றில் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆனதாண்டவபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வசூலுக்காக சென்றுள்ளார். வாகனம் பஞ்சர் ஆனதால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டு அவருடன் மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளார். கழுக்கானிமுட்டம் அருகே சென்றபோது மர்மநபர்கள் 2 பேர் இருசக்கரவாகனத்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து லிப்ட் கொடுத்த இருசக்கர வாகன ஓட்டுநர், மற்றும் மர்ம நபர்கள் சேர்ந்து ஜெகநாதனை அடித்து தாக்கியதோடு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு ஜெகன்நாதனை விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து ஜெகன்நாதனின் நண்பர்கள் மற்றும் கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த சிலரின் உதவியுடன் வழிபறி செய்தவர்களை மடக்கி பிடித்தபோது இருவர் தப்பி ஓடினர். லிப்ட் கொடுத்த நபரை பிடித்து அடித்து மரத்தில் கட்டி வைத்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் வழிபறியில் ஈடுபட்ட நபரை மீட்டு விசாரணை செய்ததில் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் கழனிவாசல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் வரதராஜன் (18), என்பதும் மயிலாடுதுறை கழுக்காணிமுட்டம் ஈவேரா தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் சுபாஷ் (18) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து தனியார் சிட்பண்ட் ஊழியரை தாக்கி விட்டு செல்போன் பணத்தை திட்டமிட்டு பறித்து சென்றதும் ஒருவர் எதிர்பாராத விதமாக சிக்கியதும் தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் வரதராஜன், சுபாஷ் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரதராஜன், சுபாஷ் ஆகிய 2 பேரையும் மயிலாடுதுறை சப்- ஜெயிலில் அடைத்தனர். மேலும் சிறுவனை தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொண்டு சேர்த்தனர்.