பைக் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது - சிறையில் அடைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே இருசக்கர வாகனம் திருடிய சிறுவர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 07:36 GMT
பைக் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர், அகரவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்.30 கொத்தனார். இவர் கடந்த 10 ஆம் தேதி திருக்கடையூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு தூங்கிவிட்டு காலை எழுந்து பார்த்தபோது வாசலில் நிறுத்தி இருந்த ஐயப்பனின் பல்சர் இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. எங்கு தேடியும் கிடைக்காததால் 12ஆம் தேதி ஐயப்பன் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் இருசக்கர வாகனம் மாயமான பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ்.21, மணிகண்டன் மகன் சாருகேஷ்.19. மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் ஐயப்பனின் வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதை அடுத்து சிறுவன் உள்ளிட்ட மூவருடன், அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து பொறையார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து பொறையார் போலீசார் பிடிபட்ட மூவரையும் கைது செய்து பிரகாஷ், சாருகேஷ் இருவரையும் திருச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்னர் பொறையார் சப்-ஜெயிலில் அடைத்தனர். சிறுவரை நாகை சிறார் நீதி குழுமத்தில் ஆஜர் செய்த பின்னர் தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சேர்த்தனர்.