லஞ்சம் பெற்ற துணை சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை; சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
லஞ்சம் பெற்ற துணை சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Update: 2023-11-30 16:22 GMT
திருப்பத்தூர் தாலுகாவில் கடந்த 2010ம் ஆண்டு துணை சர்வேயராக பணிபுரிந்தவர் ஆறுமுகம் (62). இவரிடம் எஸ்.வி. மங்கலத்தைச் சேர்ந்த ராதா (58) என்பவர் தங்களுடைய பூர்வீக இடத்தை அளந்து பட்டா வழங்கும் படி கேட்டு விண்ணப்பித்தார். இந்த பணியை செய்வதற்கு ரூ.5000 லஞ்சம் தர வேண்டும் என்று ஆறுமுகம் கேட்டார். இதில் முதல் கட்டமாக ரூ1,500 தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். பணம் தர விரும்பாத ராதா இது குறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் ஏற்பாட்டின் பேரில் கடந்த 2010ம்ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி ராதா ரசாயன பவுடர் தடவப்பட்ட பணத்தை ஆறுமுகத்திடம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஆறுமுகத்தின் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில் முரளி, குற்றம் சாட்டப்பட்ட துணை சர்வேயர் ஆறுமுகத்திற்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.