நகை பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறை

சங்ககிரியில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், நகையை மறைத்து வைக்க உதவிய பெண்ணுக்கு அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-02-04 08:16 GMT

காவல் நிலையம் 

சேலம் மாவட்டம் சங்ககிரி, யாதவர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவர் கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே வாசலை பெருக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஈரோடு, வெப்படை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திகேயன், சேலத்தை சேர்ந்த சுகுமார் மகன் மணிகண்டன், ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் தாங்கள் திருடிய நகையை சேலம், தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பிரேமா என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டனர்.

மூவரையும் போலீசார் கைது செய்து சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் என்கின்ற கார்த்திகேயன், மணி என்கின்ற மணிகண்டன் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், மேலும் தங்க நகையை மறைத்து வைத்திருந்த பிரேமாவிற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். நகை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News