மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-19 10:45 GMT

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி நகராட்சி, மீனாட்சி மஹாலில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, நான் முதல்வன் போன்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சேர்வதை உறுதிசெய்திட மாவட்டந்தோறும் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடி களஆய்வு செய்தார்.

இதனை இன்னும் செம்மைப்படுத்திட பொதுமக்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைக்கும் வகையிலும், ஏராளமான அரசு சேவைகள் அரசு அலுவலங்களை நாடிச்சென்று பெறுவதை தவிர்த்து அவர்களின் இல்லத்திலிருந்தே இணைய வழி மூலமாகவே விண்ணப்பிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

விளிம்புநிலை மக்கள் மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்கள், சேவைகளுக்கான இணைக்கப்பட வேண்டிய சான்றாவணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் உள்ளோருக்கு உதவிடும் வகையிலும், அரசு சேவைகளை எளிதாக்கி அவர்களின் இருப்பிடத்திற்கே எடுத்துச் சென்று குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கிடும் வகையில் "மக்களுடன் முதல்வர்” திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்கள் அதனைத்தொடர்ந்து,

தமிழ்நாடு முதலமைச்சர் கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம், எஸ்என்ஆர் கல்லூரியில், "மக்களுடன்முதல்வர்" திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள். தொடர்ந்து, நமது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், "மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி நகராட்சியில் 28, 29, 30, 31, 32, 33 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டம் நமது மாவட்டத்தில், ஒசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும் 9 பெரி அர்பர் பஞ்சாயத்துக்கள் ஆகிய இடங்களில் மொத்தம் 43 முகாம்கள் 18.12.2023, 19, 20, 21, 22, 26, 27,29, 30.12.2023 ஆகிய ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

இத்திட்டத்தினால், மக்களுக்கான சேவைகள் அவர்களுக்கு அருகாமையில் வழங்குவது, தேவையற்ற அலைக் கழிப்புகளை தவிர்த்தல், குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் மாற்றுத்திறனாளிகள் வயது முதிர்ந்தோர்களுக்கு அவர்களைத்தேடி அரசு சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், மின்சாரம் வாரியம் சார்பாக, புதியமின் இணைப்பு,

மின் கட்டணமாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின்சுமை கட்டணங்கள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கள் துறை/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதறை சார்பாக, கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்துவரி /குடிநீர் வரிபெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வேண்டி, குடிநீர்/கழிவுநீர் இணைப்பு, பிறப்பு/ இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை,காலி மனை வரிவிதிப்பு சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை குறித்தும்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக, பட்டாமாறுதல்/பட்டாஉட்பிரிவு/இணைய வழி பட்டா/ நிலஅளவீடு (அத்துகாண்பித்தல்), வாரிசுசான்றிதழ்/ சாதிசான்றிதழ்/ வருமானசான்றிதழ்/ இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள், முதியோர் / விதவை /கணவரால் கைவிடப்பட்டவர்/ மாற்றுத் திறனாளி/ முதிர்கன்னி / மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள் குறித்தும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை சார்பாக, கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோகமாற்றத்திற்கான ஒப்புதல், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டி விண்ணப்பம், வீட்டுவசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனைபத்திரம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான ஆணை/ விற்பனை பத்திரம் குறித்தும்,காவல்துறை சார்பாக, பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள்,

நிலஅபகரிப்பு மற்றும் மோசடி தொடர்பான புகார்கள், போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பராமரிப்பு உதவித் தொகை, மாற்றுத்திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கரநாற்காலி, மூன்றுசக்கரவண்டி, செயற்கைகால், காதுகேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கைகள், சுய தொழில் வங்கிகடன் உதவி, கல்வி உதவித் தொகை, தொழிற் பயிற்சி குறித்தும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, நலவாரியங்களில் உறுப்பினர் பதிவு, பதிவு புதுப்பித்தல்,

உதவித் தொகை/ ஒய்வூதியம் குறித்தும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைபெண் கல்வி உதவித் திட்டம், ஆதரவற்றோருக்கான உதவித் தொகை குறித்தும், ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, கல்வி உதவித் தொகை, வீட்டுமனை / இணைய வழி பட்டா குறித்து, தாட்கோ சார்பாக, டாம்கோ /டாப்செட்கோ கடனுதவிகள், கூட்டுறவு கடனுதவிகள், மகளிர் சுய உதவி குழு கடனுதவிகள், தொழில் முனைவோருக்கான கடனுதவி(DIC) உள்ளிட்ட வாழ்வாதார கடனுதவிகள் குறித்து சேவைகள் வழங்கப்பட உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து பயனடையலாம் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகரமன்ற தலைவர் பரிதா நவாப், நகரமன்ற துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் வசந்தி, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News