விழுப்புரம் நீதிமன்றத்தில் 444 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு

விழுப்புரம் நீதிமன்றத்தில் 444 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது

Update: 2024-06-09 13:09 GMT

வழக்குகளுக்கு தீர்வு 

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தை, முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா துவக்கி வைத்து, விபத்து உள்ளிட்ட வழக்குகளில் தீர்வு ஆணைகளை வழங்கி பேசியதாவது:நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை இரு தரப்பினரும் கலந்து பேசி, சமாதான முறையில் தீர்வு செய்து கொள்ளும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.

பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்ளுங்கள். ஈகோவை விட்டு விடுங்கள். விட்டு கொடுத்தால் கெட்டு போவதில்லை என்பதை உணர்ந்து, வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் பேசி, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வை பெற்று செல்லுங்கள்.கடந்த 30 ஆண்டுகளாக நாடு முழுவதும் 5.01 கோடி வழக்குகளும்,

தமிழகத்தில் ஐகோர்ட் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் 1.80 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்குகளில் தீர்வு காண வேண்டும் என விரும்புவோர், கடிதம் ஒன்றை அளித்தால் போதும்.

அந்தந்த மாவட்ட நீதிமன்றம் மூலம் இதற்கான ஏற்பாடு செய்யப்படும்.காணொலி காட்சி மூலம் வழக்கில் பங்கேற்பதற்குரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தோர் யாரேனும் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்து, நிலுவையில் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சிறப்பு நடவடிக்கை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும்.இவ்வாறு நீதிபதி பூர்ணிமா பேசினார்.இதில், மோட்டார் வாகனம், விபத்து,

காசோலை, நிலம், வங்கி கடன் சம்பந்தப்பட்ட 444 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, 3 கோடியே 26 லட்சத்து 54 ஆயிரத்து 230 ரூபாய்க்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது.மாவட்ட நீதிபதி ரகுமான், நீதிபதி ஈஸ்வரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் நீலமேகவண்ணன், அரசு வழக்கறிஞர் நடராஜன், வழக்கறிஞர் வேலவன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, சிறப்பு சார்பு நீதிபதி (எண்.1) லட்சுமி வரவேற்றார்.

Tags:    

Similar News