செங்கம் அருகே 5 லட்சம் ரூபாய் பறிமுதல்
பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்;
Update: 2024-04-04 08:54 GMT
பறக்கும் படை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த அன்வராபாத் பகுதியில் தோட்டக் கலைத் துறை உதவி அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை மாலை வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 5 லட்சம் எடுத்துச் செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது.மேலும், பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாராம். இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, செங்கம் துணை வட்டாட்சியர் ஜெயபாரதியிடம் ஒப்படைத்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உள்பட போலீஸார் உடனிருந்தனர்.