பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

மதுரையில் பாஜக மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-02-16 18:00 GMT

கோப்பு படம் 

மதுரையில் பாஜக மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது தடுக்கி விழுந்ததில் மூன்று பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கான பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிங் ரோடு அருகிலுள்ள குறிஞ்சி ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த சக்திவேல்,37 மாநகர் மாவட்ட பாஜக ஓபிசி பிரிவின் பொதுச் செயலாளராக இருந்தார். இவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. வண்டியூர் பகுதியில் அரிசி அரைக்கும் மாவு மில் ஒன்று நடத்துகிறார்.

இதன்மூலம் அரிசி மாவு பார்சல்கள் செய்து பிற இடங்களுக்கு அனுப்பி விற்கிறார். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு தனது மில்லில் இருந்து, வண்டியூர் சங்கு நகர் வழியாக ரிங் ரோடு நோக்கி டூவீலரில் சென்றார். ரிங் ரோடு ஏறும் இடத்திற்கு முன்பாக காலியிடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் சரமாரி குத்தியும், அரிவாளால் தலையில் வெட்டியும் அவரை கொலை செய்துவிட்டு கும்பல் தப்பியது. அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியினர் அங்கு சென்றுள்ளனர். அதற்குள் கொலையாளிகள் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்த அண்ணாநகர் காவல் ஆய்வாளர் அருண் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த கொலை குறித்து அண்ணாநகர் போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில்,

பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிந்தது. இது தொடர்பாக மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பியை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். மேலும், இருவரை தேடுகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், 'சக்திவேல் ரேசன் அரிசியை வாங்கி, ரைஸ்மில் மூலம் அரைத்து, மாவு பார்சல்களாக தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மேலும், பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலும் செய்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பாஜக ஓபிசி பிரிவில் மாவட்ட பொதுச்செயலாளராக இணைந்து பணியாற்றினார். இவரிடம் பணிபுரிந்த கல்மேடு பகுதியைச் சேர்ந்த மருது,27 அவரது தம்பி சூரியா (எ) ரஞ்சித்குமார்,௨௪


ஆகியோரிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது. சக்திவேலுவிடம் சில நாளுக்கு முன் ரூ.70 ஆயிரம் மருது கடன் வாங்கி இருக்கிறார். இதை திரும்பி கொடுப்பதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முதலில் ரூ.20 ஆயிரத்தை மருது திருப்பி கொடுத்துள்ளார். எஞ்சிய ரூ. 50 ஆயிரத்தை கொடுக்க முடியாத நிலையில், மருதுவின் மனைவியை பற்றி தவறாக சக்திவேல் பேசி இருக்கிறார். இது மருதுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சக்திவேலை கொலை செய்ய திட்டமிட்டார் மருது. இதைத் தொடர்ந்து சக்திவேலின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளார். இதன்படி அவர் தனது தம்பி ரஞ்சித் குமார் மற்றும் 2 பேருடன் சேர்ந்து கொல்ல தேதி குறித்துள்ளனர். இரவு மில்லில் பணி முடிந்து அதிகாலையில் வீட்டுக்கு திரும்பினார் சக்திவேல்.

இதற்காகவே காத்திருந்த மருது கும்பல், ரிங் ரோடு பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனர். அரசியல் மோதல் எதுவுமில்லை. தனிப்பட்ட பிரச்னையில் கொல்லப்பட்டுள்ளார். கொலையில் மருது, ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டனர். அவர்களது நண்பர்களை தேடுகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் மேலும் 3 பேர் கைது செய்தனர்.

5 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் இதில் 3 பேர் போலீசிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்ததாக தெரிகிறது. காவல்துறையினர் விரட்டியதில் மருது, ரஞ்சித்குமார், அவரது நண்பருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News