ரூ.510 கோடியில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள் ஆய்வு
சென்னை பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், ரூபாய் 510 கோடியில் நடைபெற்று வரும் 2 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை சென்னை, பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா, விரிவாக ஆய்வு செய்து பணித்தளத்தில் பார்வையிட்டார்.
பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஒன்றியங்களைச் சார்ந்த 214 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளையும், திருச்செனம்பூண்டி அருகே கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்று வரும் நீர் சேகரிப்புக் கிணறு, குழாய் கொண்டு செல்லும் பாலம் மற்றும் மின்இறைப்பான் அறைகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கிரண் குராலா, பணிகளை விரைவுபடுத்தி திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார்.
அதன் பின்பு, கோவிலடி அருகே காவேரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 460 மீட்டர் நீளம் உள்ள குழாய் கொண்டு செல்லும் பாலத்தினை ஆய்வு செய்தார். பின்னர் கச்சமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 90 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மின் இறைப்பான் அறை பணிகளை ஆய்வு செய்து,
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியிலிருந்து நீருட்டி குழாய்களை பதித்து, ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றுவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின் கீழ், புதுக்குடி கிராமம் சருக்கை அருகே கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்று வரும் நீர் சேகரிப்புக் கிணறு, நீர் கொண்டு செல்லும் பாலம், மின்சாதன கட்டுப்பாட்டு அறை பணிகளை ஆய்வு செய்து திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்திரவிட்டார். அதன் பின்னர் சருக்கை அருகே காவிரி ஆற்றில் கட்டப்பட்டு வரும் 210 மீட்டர் நீளமுள்ள குடிநீர் குழாய் கொண்டு செல்லும் பால பணிகள் மற்றும் சாலையின் குறுக்கே குழி வெட்டாமல் குழாய் பதிக்கும் பணி முறைகளை ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் சூலமங்கலம் கிராமத்தில் பதிக்கப்பட்டுள்ள 90 மிமீ விட்டமுள்ள குழாய்களின் நீரழுத்த சோதனையை பார்வையிட்டார். பின்னர் பசுபதிகோவில் பகுதியில் நடைபெற்று வரும் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பின்னர் 2 கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் உரிய காலத்தில் செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். இக்கள ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.