பஞ்சு வியாபாரியிடம் ரூ.6 லட்சம் பறிமுதல்
கோவில்பட்டி அருகே பஞ்சு வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கோவில்பட்டி பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலரும் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளருமான அழகுரமா தலைமையிலான சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காளிபாண்டி, தலைமைக் காவலா்கள் கனகராஜ், அனுசுயா, முதல்நிலைக் காவலா் ராஜகுரு ஆகியோா் ஊத்துப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியிலிருந்து கடம்பூா் நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டபோது அதில் ரூ.6 லட்சம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவா் விருதுநகா், பாத்திமா நகரைச் சோ்ந்த மிக்கேல்ராஜ் மகன் விசுவாசம் தியாகராஜன் என்பதும், பஞ்சு வியாபாரியான இவா் கோவில்பட்டியில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.6 லட்சம் எடுத்துக்கொண்டு கடம்பூரில் உள்ள விவசாயிகளிடம் பருத்திக் கொள்முதல் செய்ய செல்வதாகக் கூறினார்.
ஆனால், அவா் ஆவணங்களைக் காண்பிக்காததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளைத்துரை, வட்ட வழங்கல் அலுவலா் பாண்டித்துரை ஆகியோா் முன்னிலையில் கோவில்பட்டி வட்டாட்சியா் சரவண பெருமாளிடம் ஒப்படைத்தனர்.