61 பயனாளிகளுக்கு ரூ.8.61 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட முகாம்
செட்டியப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் 61 பயனாளிகளுக்கு ரூ.8.61 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், செட்டியப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 61 பயனாளிகளுக்கு ரூ.8.61 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். இன்றைய முகாமில், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா 2 பயனாளிகளுக்கு ரூ.98,000 மதிப்பீட்டிலும், நத்தம் பட்டா நகல் 6 நபர்களுக்கும், முழுப்புலம் பட்டா மாறுதல் 6 நபர்களுக்கும், நத்தம் பட்டா மாறுதல் 6 நபர்களுக்கும் உட்பிரிவு பட்டா 19 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் உதவித்தொகை 3 நபர்களுக்கு ரூ.67,500 மதிப்பீட்டிலும், உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை 12 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் நிரந்தர கல்துாண் பந்தல் அமைக்க 5 நபர்களுக்கு ரூ.6.90 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் - அசாடிராக்டின் ஒரு பயனாளிக்கு ரூ.1000 மதிப்பீட்டிலும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்-துவரை சாகுபடி பரப்பு விரிவாக்கம் திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.5,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 61 பயனாளிகளுக்கு ரூ.8.61 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகள் அனைத்தும் ஆன்லைன் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பட்டா கோரி இ-சேவை மையங்களில் ரூ.60 கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் போதும், உங்களுக்கான பட்டா வீடு தேடி வரும். முழுப்புலம் பட்டா எனில் 15 நாட்களிலும், உட்பிரிவு பட்டா எனில் 30 நாட்களிலும் வந்துவிடும். மேலும், உங்கள் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது கைப்பேசிக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் மனுவின் நிலை குறித்து வீட்டிலிருந்தே அறிந்துகொள்ளலாம். எந்தவொரு விண்ணப்பங்களும் 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருப்பது இல்லை. அதற்குள் தீர்வு காணப்பட்டுவிடும். இம்முகாமில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மேலாளர் முகைதீன் அப்துல் காதர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாரயணன், மாவட்ட செயல் அலுவலர்(வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) சுதாதேவி, ஆத்துார் வட்டாட்சியர் வடிவேல்முருகன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் நாகவள்ளி, செட்டியப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.