காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் ரூ.667 கோடி!
காஞ்சிபுரம் மாநகராட்சியின், 2024- 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், 667 கோடி ரூபாய்க்கு இன்று தாக்கல் செய்யப்படுகிறது
காஞ்சிபுரம் மாநகராட்சியின், 2024- - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், 667 கோடி ரூபாய்க்கு இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்தாண்டைவிட, 90 கோடி ரூபாய் கூடுதலாக பட்ஜெட் தாக்கலாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில், இன்று நடைபெற உள்ளது. இதில், மாநகராட்சியின் 2024- - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்தாண்டு முன்னறிவிப்பு இன்றி, மாநகராட்சி கூட்டத்தில் திடீரென, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், கவுன்சிலர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், 51 வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி நிர்வாகம் இப்போது முன் கூட்டியே பட்ஜெட் விபரங்களை வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்ரலில் துவங்க உள்ள புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 666 கோடியே, 91 லட்சத்து, 33,000 ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும், 667 கோடியே, 77 லட்சத்து, 76,000 ரூபாய் செலவாகும் எனவும், உத்தேச மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், 1 கோடியே, 5 லட்சம் ரூபாய் பற்றாக்குறை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 577 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை காட்டிலும், 90 கோடி ரூபாய் கூடுதலாக இந்தாண்டு பட்ஜெட் தாக்கலாகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை, வருவாய் பிரிவு நிதி, குடிநீருக்கான நிதி, கல்வி நிதி ஆகிய மூன்று வகையான நிதியின் வாயிலாக, பொதுப்பிரிவு, பொறியியல், வருவாய், சுகாதாரம், நகரமைப்பு ஆகிய பிரிவுகள் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இயங்கி வருகிறது. நகரவாசிகளிடம் வசூலிக்கப்படும் வரி மூலம், வருவாய் பிரிவுக்கு, 322.3 கோடி ரூபாய் வருவாய் எனவும், அதற்கு நிகராக 322.9 கோடி ரூபாய் செலவினமாகும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.