லாரி மோதிய விபத்தில் 5 வயது குழந்தை பலி

துறையூர் அருகே நாகலாபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை மீது, லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.;

Update: 2024-03-02 12:01 GMT

பைல் படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள வடியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருக்கு திருமணம் ஆகி அம்சவள்ளி (28) என்கிற மனைவியும், கவின் (5), சுபஸ்ரீ (3) என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.  இந்த தம்பதியினர் இருவரும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு வெட்டுவதற்காக தன்னுடைய இரு குழந்தைகளுடன் வந்துள்ளனர்.

Advertisement

தங்களுடைய குழந்தையை அருகில் விளையாட விட்டுவிட்டு, தம்பதியினர் இருவரும் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகளுக்கு மேஸ்திரி ஆக பணிபுரிந்து வரும் திருக்கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை கவனிக்காமல் திடீரென்று லாரியை முன்னோக்கி இயக்கியுள்ளார்.அங்கு விளையாடிக் கொண்டிருந்த கவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.  இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இச்சம்பவம் குறித்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் இறந்த கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர். வெங்கடேஷ் என்பவர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.  துறையூர் அருகே லாரி சக்கரத்தில் 5 வயது குழந்தை சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News