கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகி
Update: 2023-11-28 04:42 GMT
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி. பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரான இவரது தலைமையில் சிலர் நேற்று கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கழுத்தில் தொங்கவிடப்பட்டு உள்ள கயிற்றை அகற்றும்படி கூறினர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களில் 4 பேர் சென்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘உடையாப்பட்டி பகுதியில அரசு வழங்கிய பட்டா நிலத்தில் எங்கள் சமூகத்தை சேர்ந்த சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த பகுதியில் வேறு ஒருவர் நிலம் வாங்கிக்கொண்டு எங்கள் நிலத்திற்கு செல்லும் பாதையில் தடுப்பு அமைத்து உள்ளார். இதனால் எங்கள் நிலத்திற்கு செல்ல முடியவில்லை. போலீசார், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு உள்ளனர்.