மோகனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்த்திருவிழா
மோகனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மோகனூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுத்தெருவில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா, கடந்த, 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பங்கு தந்தை ஜான்போஸ்கோ பால் தலைமையில் நவநாள் திருப்பலி, நவநாள் ஜெபம், நவநாள் திருப்பலி மற்றும் தேர் பவனி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 10 மணிக்கு, நாமக்கல் ஆர்.சி. சமூக சேவை மைய இயக்குனர் அருட்தந்தை பிரஷனா தலைமையில், திருவிழா திருப்பலி, பகல், 1 மணிக்கு அன்பின் விருந்து, மாலை, 5 மணிக்கு பொங்கல் மந்திரிப்பு விழா நடந்தது.
தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய புனிதர், பஸ் ஸ்டாண்ட், நாமக்கல் ரோடு, கடை வீதி, வளையப்பட்டி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு ஆசீ வழங்கினார். வழிநெடுகிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்கினர். நேற்று அதிகாலை, 1 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை, பங்கு மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.