ராமநாதபுரம்: 400 கிலோ எடை... 21 அடி நீளம் பிரம்மாண்ட அருவா
ராமநாதபுரம் பரமக்குடியில் 21 அடி உயரத்தில் 470 கிலோ எடையில் பிரம்மாண்ட அருவாளை பக்தர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு இருளாயி என்ற மனைவியும் மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சமய கருப்பணசாமி கோவில் குலதெய்வ கோவிலாகும்.
கருப்பையா குடும்பத்தின் சார்பில் குழந்தை வரம் வேண்டி இக்கோவிலில் நேர்த்திக்கடன் வைத்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பையாவின் நேர்த்திக்கடன் நிறைவேறி உள்ளது. நேர்த்திக்கடன் நிறைவேறியதை அடுத்து சாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமய கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு 21 அடி உயரத்தில் 470 கிலோ எடையில் பிரம்மாண்ட அருவாளை நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் செய்யப்பட்ட இந்த அருவாள் கிரேன் உதவியுடன் கோயில் வாசலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று பிரமாண்ட அருவாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குடும்பத்தினர் வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து கருப்பையா கூறுகையில், "200 ஆண்டுகளுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம்புதூர் கிராமத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்தோம். மடந்தை, தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தினர் சமயக்கருப்பண சாமியை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். 1998 ஆம் ஆண்டு சிறிய பீடமாக அமைத்து வணங்கி வந்தோம். 2022 ஆம் ஆண்டு பெரிய ஆலயமாக கட்டினோம், 21 அடி உயரமுள்ள அருவாளை நேர்த்திகடனாக கோவிலுக்கு நிலை நிறுத்துவோம் என சாமியிடம் வேண்டி இருந்தோம். நாங்கள் கேட்ட வரம் கிடைத்ததால் இந்த அருவாளை கோயில் முன்பாக நிலை நிறுத்தி, கிடா வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்" என கூறினார்.