சேலம் அருகே இளைஞரணி மாநாட்டுக்கு வந்த திமுக பிரமுகர் தவறிவிழுந்து சாவு
சேலம் அருகே இளைஞரணி மாநாட்டுக்கு வந்த திமுக பிரமுகர் தவறிவிழுந்து பலியாகினார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு கடந்த 21-ந்தேதி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் தங்கப்பிரகாசம் (வயது 42) என்பவர் வந்தார்.
மாநாட்டு திடலில் மது போதையில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு பரிமளா (35) என்ற மனைவியும், வைஷ்ணவி (15), மெகந்தி (16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு வந்த தி.மு.க. பிரமுகர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.