புலிச்சோலை வனப்பகுதி பற்றி எரியும் காட்டுத் தீ
புலிசோலை வனப்பகுதி அருகே உள்ள தனியார் தோட்டப்பகுதிகளிலும் பற்றி எரிந்து வரும் காட்டு தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பகல் வேளைகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் செடி,கொடிகள்,புல்வெளிகள், புதர்கள் காய்ந்தும் கருகியும் உள்ளன.
இதன் காரணமாக கடந்த சில தினங்களாக மலைப்பகுதிகளில் அரசு வருவாய் நிலம்,தனியார் தோட்ட பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் அவ்வப்போது தீ பற்றி எரிந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையின் அருகே உள்ள புலிச்சோலை வனப்பகுதிகளிலும், வனப்பகுதியின் அருகே உள்ள தனியார் தோட்ட பகுதிகளிலும், வருவாய் நிலங்களிலும் பல ஏக்கர் பரப்பளவில் காய்ந்து இருந்த புதர் பகுதிகளிலும், புல்வெளிகளிலும் திடீரென காலை வேளை முதல் தீ பற்றி எரிய தொடங்கியது.
காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென கொழுந்து விட்டு எரிந்து பரவி வருகிறது, மேலும் வனப்பகுதிக்குள் தீ முழுவதும் பரவாமல் இருக்க வனத் துறையினர் சுமார் இரண்டு மணிநேரமாக போராடி தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், தீ தொடர்வதால் இந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கின்றது,