தாளவாடி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை வனப்பகுதியில் விடுவிப்பு
தாளவாடியை அருகே கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் சிறுத்தையை தட்டாந்துரை வனப்பகுதியில் விட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி தாளவாடியை அடுத்த தருமாபுரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, நாய் மற்றும் மாடுகளை வேட்டையாடி வந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி புகாரின் பேரில் தாளவாடி வனத்துறையினர் கூண்டுக்குள் நாயை கட்டி வைத்து தோட்டத்தின் அருகே கூண்டு வைத்தனர்.
இதில் சிறுத்தைய வசமாக சிக்கி கொண்டது. அந்த சிறுத்தை 5 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதன்பின் அந்த சிறுத்தையை தட்டாந்துரை வனப்பகுதிக்கு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு வைத்து கூண்டை வனத்துறையினர் திறந்துவிட்டனர். உடனே கூண்டில் இருந்து சிறுத்தை சீறிப்பாய்ந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.