திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 5 வருடம் ஏமாற்றிய நபர் கைது
மயிலாடுதுறை அருகே உள்ள காளி கீழ பனையூரில் 5 வருட காதல் வாழ்கை கசந்ததால் பெண்ணைக் கைவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை அருகே உள்ள காளி கீழ பனையூரை சேர்ந்தவர் அன்பழகன் மகன் பாலு(34) கூலித்தொழிலாளி ஆவார். இவர் பக்கத்து ஊரை சேர்ந்த இளம் பெண்ணை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார், இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று பாலு கூறியதைக் கேட்ட அப்பெண்ணும் நம்பி கணவன் மனைவிபோல் பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
காலப்போக்கில் பாலுவின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அப்பெண், காலம் ஆகிக் கொண்டிருக்கிறது, திருமணம் செய்துகொள் என்று கேட்டுள்ளார், அதற்கு காலம் கடத்திவந்த நிலையில் அப்பெண்ணை சந்திப்பதையே தவிர்த்து வந்துள்ளார், அந்தப்பெண்ணும் விடாமல் பாலுவை சந்தித்து திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார்.
கோபமடைந்த பாலு, உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் நாம் இருவரும் ஒன்றாகப் பழகியதை வெளியில் சொன்னால் உன்னை உயிருடன் விடமாட்டேன் என்று மிரட்டியுள்ளார், பயந்துபோன அப்பெண் தன் பெற்றோர்களிடம் நடந்ததை எடுத்துக் கூறியபோது அவர்கள் பாலுவிடம் பேசிப் பார்த்தும் ஒத்துவரவில்லை. இதுகுறித்து அப்பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், அப்புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் புஷ்பலதா விசாரணை மேற்கொண்டு நம்ப வைத்து பெண்ணை ஏமாற்றிய வழக்கில் பாலுவை கைதுசெய்தார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.