பேராவூரணி அருகே காவு வாங்கும் கட்டப்பட்டு வரும் புதிய பாலம்
பேராவூரணி அருகே, வெளிச்சம் இல்லாததால், உயிர்களை காவு வாங்கும் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
போக்குவரத்திற்காக அருகிலேயே ஒரு பாதை அமைக்கப்பட்டு, இதன் வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணிகள் நடப்பதை தெரிந்து கொள்ளும் வகையில், பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என பாலத்தின் இரண்டு புறங்களிலும் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் மின் விளக்கு இல்லாத காரணங்களால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இந்தப் பகுதியில் முறையாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. மேலும், இரவு நேரங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.
ஒளிரும் சிவப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை. இதனால் வழக்கமாக இந்த வழியில் வரும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும் நிலையில், புதிதாக இப்பகுதிக்கு வருபவர்கள் பாலத்தில் நேராக சென்று விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு சென்னையில் இருந்து சத்யா என்பவர் தனது சொந்த ஊரான மேற்பனைக்காட்டுக்கு வந்து கொண்டிருந்தார் அப்போது இரவு நேரம் என்பதாலும், மின்விளக்கு வசதி உள்ளிட்ட எந்த அடையாளமும் இல்லாததால் பாலத்தில் நேராகச் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொக்லின் வாகனத்தில் மோதி அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் காயமடைந்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இதே போல் பாலத்தின் மற்றொரு பகுதியில், அருகில் உள்ள சொர்ணக்காடு கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வந்த பேராவூரணி அருகே உள்ள உடையநாடு கிராமத்தைச் சார்ந்த இளைஞர் ஹரிவர்ஷா (21) நேராகச் சென்று கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடைய உடல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அவருடைய நண்பர் நிகிலன் (21) உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இப்பகுதியில் இரவு நேரங்களில் இருளாக இருப்பதால் ,இரண்டு பக்கமும் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும்.
பாலப்பணி நடைபெறுவதை புதிதாக வரும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிரும் விளக்கு வசதி, மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பாலப்பணிகள் தொடங்கியதிலிருந்து ஆறுக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.