அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி பலி

ஓட்டப்பிடாரம் அருகே சூறைக்காற்றில் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அரசு ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-05-12 08:54 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே புதுபச்சேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் முத்துகுமார் (41). இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி. பிரிவில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பச்சை பெருமாள்புரத்தில் உள்ளது. அங்கு பருத்தி பயிரிட்டு இருந்தார். நேற்று மதியம் முத்துகுமார் தனது தோட்டத்துக்கு சென்று, பருத்தி செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தார். அப்போது தோட்டத்தில் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக முத்துகுமார் மிதித்துள்ளார்.

இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த பக்கத்து தோட்டத்துகாரர் அதிர்ச்சி அடைந்து, முத்துகுமாரின் குடும்பத்தினருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முத்துகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் மாலையில் ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இதில் முத்துகுமாரின் தோட்டத்தின் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததும், அதனை அறியாமல் நேற்று அங்கு மருந்து தெளிக்க சென்ற அவர் மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்தை ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் திருமணி ஸ்டாலின் பார்வையிட்டு, இறந்த முத்துகுமாரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இறந்த முத்துகுமாருக்கு முத்துசெல்வி என்ற மனைவியும், சுபாஷ் (8) என்ற மகனும், மித்ரா (6), கவுசிகா (5) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News