ஆற்றில் குளிக்க சென்ற காவலர் பாறையில் மோதி உயிரிழப்பு
ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்ற குற்றப்பிரிவு காவலர் பாறையில் மோதி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோவில் ஆற்று ஓடையில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோவில் ஆற்றில் குளிக்க சென்ற சாத்தூர் செவல்பட்டி பகுதியை சேர்ந்த விருதுநகர் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவலர் டேவிட் சுதர்சன் ராஜா வயது 38 என்பவர் அவரது அண்ணன் மற்றும் நண்பர்களுடன் ஆற்று நீர் ஓடைபகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது பாறையில் மோதி காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மம்சாபுரம் காவல்துறையினர் காவலர் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகம் வந்து கொண்டிருப்பதால் வனத்துறையினர் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குளிபதற்க்கு தடை விதிக்க வேண்டும் மேலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.