பழங்குடியினர் மொழி, கலாச்சாரங்களை ஆவணப்படுத்த தனி துறை!
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைச் சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 34 மாவட்டங்களில் நடந்த இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா 35வது மாவட்டமான நீலகிரியில் இன்று நடந்தது.
Update: 2024-02-23 15:33 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைச் சங்கமம் நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் பழங்குடியினர் மக்களின் மொழிகளை மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை ஆவணப்படுத்தும் வகையில் தனித்துறை அமைக்கப்பட்டு இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய தோடர் ,கோத்தர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் மொழிகளை ஆவணப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,"என்றார். இதையடுத்து கலை நிகழ்ச்சி நடத்திய குழுக்களுக்கு காசோலை வழங்கி கௌரவித்தார். மேலும் இயல், இசை நாடக நிகழ்ச்சியில் தோடர் பழங்குடியினர்களின் நடனம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.