ஜவுளி அதிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி முற்றுகை !
ஜவுளி அதிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மஞடஞ்சாவடி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-07-09 07:25 GMT
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 51). ஜவுளி அதிபர். கடந்த 6-ந் தேதி இரவு தனது காரில் ராமாபுரம் பகுதியில் இருந்து பெருமாகவுண்டம் பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கீழே விழுந்ததாகவும், பின்னால் சுந்தரமூர்த்தி ஓட்டி வந்த கார் மோதியதாக நினைத்து அப்பகுதியில் நின்ற இளம்பிள்ளையை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 7 பேர் சேர்ந்து சுந்தரமூர்த்தி காரை நிறுத்தி அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த சுந்தரமூர்த்தி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜவுளி அதிபரை தாக்கிய தகவல் அறிந்த உறவினர்கள் நேற்று மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சுந்தரமூர்த்தியை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அறிந்ததும் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஜவுளி அதிபரின் உறவினர்கள் சேலத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.