சேலம் அருகே நிதி ரூ.12 லட்சம் பறித்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
சேலம் அருகேநிதி நிறுவன ஊழியர்களிடம் கத்திமுனையில் ரூ.12 லட்சம் பறித்த கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தை சேந்தவர் யுவராஜ். இவர் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் ஆத்தூர் நாவக்குறிச்சியை சேர்ந்த குமார் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர்கள் நிதி நிறுவனம் மூலம் கடன் வழங்கப்பட்டு வசூல் செய்த ரூ.12 லட்சத்து 9 ஆயிரத்தை எடுத்து கொண்டு மாசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு டெபாசிட் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
உடையாப்பட்டி பகுதியில் சென்ற போது அவர்களை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 9 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
இதையடுத்து அவர்களை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் செல்வம், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.