ஆட்சியர் தலைமையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் சமூகநலத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இம்முகாமில் திருநங்கைகளுக்களுக்கான நல வாரிய அட்டைகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட சமூகநலத்துறை, வருவாய் துறை. காவல் துறை. மாவட்ட ஊராட்சி முகமை, கால்நடை பராமரிப்பு துறை, திறன்மேம்பாட்டுதுறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், எல்காட் ஆதார் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள். களப்பணியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கான சீட்ஸ் தொண்டு நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த கருத்துகளை தெரிவித்தனர். இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் திருநங்கைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் திருநங்கைகளுக்கான நலவாரிய அட்டை ஆதார் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஸ்மான் அட்டை ஆகிய விண்ணப்பிக்க இணையவழி சேவைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் திருநங்கைகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும். திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுத்தியுள்ளார்.
திருநங்கைகள் அனைவரும் அரசின் திட்டங்களான திறன் பயிற்சி. தையற்பயிற்சி, கால்நடைவளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி பெற்று. சுயமாக தொழில் தொடங்கி வருவாய் ஈட்டும் வகையில் அரசால் வழங்கப்படும் கடன் உதவிகளை பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கை தரத்தை உயர்த்தி. பொருளாதாரத்தில் தன்னிறைவுடன் சமூகத்தில் நல்ல நிலையில் கண்ணியமாக வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இச்சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நாகலிங்கம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.