முன்விரோதத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து
கரூரில் பொது இடத்தில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்த விவகாரத்தில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இளைஞரை கத்தியால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட, விவிஜி நகர் அருகே உள்ள அம்மன் நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் தாஸ் மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் வயது 19. அருகில் உள்ள திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்தி என்கிற எலும்பு கார்த்திக் வயது 22. இந்த இளைஞர் மது போதையில் பொது இடத்தில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்த தொடர்பாக ஜீவானந்தம், எலும்பு கார்த்திக் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 8 மணி அளவில், வெங்கமேடு திட்ட சாலை பகுதியில் செயல்படும் கரம் ஸ்டால் கடையில் ஜீவானந்தம் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த எலும்பு கார்த்திக், ஜீவானந்தத்தை தகாத வார்த்தை பேசி, கத்தியால் குத்தி காயங்கள் ஏற்படுத்தி,மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஜீவானந்தம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பொது இடத்தில் தகாத செயலில் ஈடுபட்ட எலும்பு கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.