இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
மணவாளக்குறிச்சி அருகே இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Update: 2024-04-12 10:29 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள்லிங்கம் (34). கொத்தனார். இவரது மனைவி மகேஸ்வரி (32) இந்த தம்பதிக்கு ஆஷிக் (9) ஆஷிகா (8 ) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருள்லிங்கம் தற்போது திருநெல்வேலியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் வாரம் ஒரு முறை சொந்த ஊருக்கு வருவது வழக்கம். மகேஸ்வரி வெள்ளமடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவதினம் மகேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு செல்வதாக தனது கணவரிடம் போனில் கூறிவிட்டு, இரண்டு குழந்தைகளையும் கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகேஸ்வரியின் அக்காவை அருள்லிங்கம் தொடர்பு கொண்ட போது, மகேஸ்வரியும் பிள்ளைகளும் அங்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அருள்லிங்கம் உடனே மணவாளக்குறிச்சிக்கு வந்து மனைவி பிள்ளைகளை தேடி உள்ளார். ஆனாலும் மூன்று பேர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மணவாளக் குறிச்சி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பண்ணை தேடி வருகின்றனர்.