மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி நாள் போட்டிகள்

காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-06-24 09:43 GMT

காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-      தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்க பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு கல்வி கண்கள் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

     இதன் மூலம்  சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பரிசு தொகையை பயன்படுத்துவது குறித்து நடைமுறைகள் பின்பற்றிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.       மேலும் நடப்பு கல்வியாண்டில் ஜூலை 15ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  மேலும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்தவும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்து, விழாவை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி சிறப்பாக நடத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. 

       அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 1500, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.  1000, நடுநிலை தொடக்க பள்ளிக்கு ரூ. 500 வழங்க பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News