கோகுலம் மருத்துவமனை சார்பில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம் கோகுலம் மருத்துவமனை சார்பில் நாளை முதல் 15-ந் தேதி வரை சாலைவிபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
சேலம் கோகுலம் மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சாலை விபத்துக்களை தவிர்க்கும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்து வருகிறது. இதையொட்டி கோகுலம் மருத்துவமனை சார்பில் கடந்த 20 ஆண்டுகளில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு புகைப்பட கண்காட்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டும் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு முன்னிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை தெய்வீக திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், பாலசுப்பிரமணியன், பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரேசன், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். சாலை விதிகள் கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்த கண்காட்சி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.