விசைப்படகு மீனவர்கள்மீது நடவடிக்கை - நாட்டுப் படகு மீனவர்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் பைபர் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க தலைவர் முடியப்பன், செயலாளர் அந்தோணி விஜின், பொருளாளர் அந்தோணி கிரிமினாலி மற்றும் மீனவர்கள், சிஐடியு கடல்தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஜஸ்டின் தலைமையில் ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விதிமுறைகளை மீறி மீன்பிடிக்கும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து சிஐடியு கடல் தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஜஸ்டின் கூறியதாவது, பாம்பனில் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் சட்டத்தை மதிக்காமல், கடல் ஒழுங்குமுறையை மீறி பாம்பன் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வாரத்தின் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி தொழில் செய்து கொள்ளலாம் என்ற உத்தரவை மீறி வாரத்தின் ஏழு நாட்களும் சுருக்குமடி வலையில் பாம்பன் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். பாம்பன் தீவு பகுதி மீனவர்களுக்கே போதிய மீன்பிடிப்பு இல்லாத நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிக குதிரைதிறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட பெரிய விசைப்படகுகளும், கடலில் அதிக ஒளி வீசும் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறையாலும், பெரிய படகுகள் நாட்டுப்படகின் வலைகளை சேதப்படுத்தி செல்வதாலும் பாம்பன்மீனவர்கள் தொழிலின்றி வேதனைக்குள்ளாகியுள்ளனர். மீனவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றன. எனவே ஆட்சியர் விதிமுறைகளை மீறி மீன்பிடிக்கும் விசைப்படகுகளை தடுத்தி நிறுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.