கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் நடவடிக்கை - ஆட்சியர்
அனுமதியின்றி ஒலிபெருக்கியை நிறுவி உபயோகிப்பவர்கள், இரவு நேரங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவோர் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அளவுக்கு அதிகமான மற்றும் விரும்பத்தகாத அதிகசத்தம், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள், அதிக ஒலி எழுப்பும் வாகனபோக்கு வரத்து மற்றும் ஒலிபெருக்கிகள் ஒலிமாசு ஏற்பட முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக புகார்கள் வருவதாகவும். பொதுவாக, தொழிற்சாலைகள் ஒலி மாசினைக்குறைக்க ஒலி மாசுதடுப்பு சாதனங்களை நிறுவி ஒலி மாசினை குறைக்கின்றன.
இது போன்று, வாகனப்போக்குவரத்தை நெறிப்படுத்துவதன் மூலமும் ஒலிமாசினைக் குறைக்க இயலும். ஆனால், பொதுசுகாதாரச் சட்டத்தில் உள்ள வழிமுறைகளை மீறி அரசியல் கட்சி நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் தனிநபரால் நடத்தப்படும் விழா மற்றும் கொண்டாட்டங்களில் முறையற்ற வகையில் ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதனால் வெளி வரும் அதிகசத்தமான ஒலி மாசினால், பொதுமக்களுக்கும், முதியோர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் எண்ணற்ற இன்னல்கள் ஏற்படுகின்றன.
மேலும், தேர்விற்குத்தயார் செய்யும் மாணவர்களுக்கும் இன்னல்கள் ஏற்படுகின்றன. எனவே, மேற்கூறிய நிகழ்வுகளுக்கு ஒலி பெருக்கியை நிறுவி பயன்படுத்தும் முன் காவல் துறையிடம் முறையாக முன் அனுமதிபெற்று, அனுமதிக்கப்பட்ட பகுதி மற்றும் நேரங்களில் மட்டுமே குறைந்த ஒலியுடன், ஒலி பெருக்கியினை உபயோகித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கஅறிவுறுத்தப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் (இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை) ஒலிபெருக்கியினை உபயோகிக்கக் கூடாது என்றும் மற்றும் கூம்பு வடிவ ஒலி பெருக்கியினைக் கண்டிப்பாக பயன்படுத்தக கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
காவல்துறை அனுமதியின்றி ஒலிபெருக்கியை நிறுவி உபயோகிப்பவர்கள் மீதும், இரவு நேரங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவோர் மீதும் மற்றும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளும் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களைப்பறி முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.