மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கெட்டுப் போன மீனை விற்கும் வெளியூர் நபர்கள் மீது நடவடிக்கை?
மல்லிப்பட்டினம் துறைமுகத்தில், வெளியிலிருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் வடக்கு பாரம்பரிய மீனவர் நல சங்க அலுவலகத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மீனவர் பேரவை தஞ்சை மாவட்டச் செயலாளர் வடுகநாதன் தலைமை வகித்தார். விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் இளங்கோ, பாரம்பரிய மீனவர் நலச் சங்க செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விசைப்படகு, நாட்டுப்படகுகள் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன் பிடித்தொழிலுக்கு சென்று பிடித்து வரும் நண்டு, இறால், மீன்களைத் தவிர வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து துறைமுகப் பகுதியில் விற்பனை செய்வதால், துறைமுக வளாகத்தில் தரம் இல்லாத, பார்மாலின் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, காவல்துறை மூலம் வெளியிலிருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் செய்வது, தரமற்ற, சுகாதாரமற்ற மீன்களை கொண்டு வந்து துறைமுகத்தில் விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 6 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைப்பது, மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் மாடுகள் வளர்ப்பவர்களால் துறைமுக பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மாடுகள் சாலையில் படுத்து போக்குவரத்திற்கும் இடையூறாகவும், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மாடுகளை பிடித்து உரிமையாளர்களிடம் கடும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது, தற்போது முதல் ஏப்ரல் மாதம் வரை பனிக் காலமாக இருப்பதாலும், தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதி இலங்கை கடல் பகுதிக்கு அருகே இருப்பதாலும் தூரக்கடல் சென்று மீன் பிடி தொழில் செய்ய முடியாது. காலங் காலமாக கோடியக்கரைக்கு தெற்கே முத்துப்பேட்டை முதல் கோடியக்கரை வரை உள்ள சதுப்பு நில காட்டுப்பகுதிக்கு நேர் கிழக்கே 4 1/2 முதல் 5 பாகம் வரை காலம் காலமாக மீன்பிடித்து வருகின்றார்கள். இவர்களை கடந்த சில மாதங்களாக மீன்வளத்துறையினர் பிடித்து தண்டிப்பதும், தொழில் முடக்கம் செய்வதும் வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் நிலையாகும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் விசைப்படகு மீனவர்களை எப்போதும் போல் வழக்கமாக மீன்பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க அனுமதிக்க மீன்வளத்துறையை கேட்டுக் கொண்டும், மேற்கண்ட தீர்மானங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், மீன்வளத்துறை துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.